Monday, January 7, 2008

அறிவியல்-1 நோபெல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி

சர் சந்திரசேகர வெங்கட ராமன் C.V Raman பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர்.

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பளியில் பிறந்தார்

ராமன் விளைவு என்றால் என்ன ?
ஒளியானது ஓர் பளிங்குக் கடத்தி [Transparent Medium] ஊடே நுழையும் போது, ஒளியின் சில பகுதி சிதறி அதன் அலை நீளம் மாறுகிறது. அந்த நிகழ்ச்சி ராமன் சிதறல் [Raman Scattering] என்று இப்போது அழைக்கப் படுகிறது. அதுவே ராமன் விளைவு [Raman Effect] என்றும் பெயர் பெறுகிறது.

ராமன் தனது சோதனைகளைச் சீராக்கி 1928 இல் தூசியற்ற வாயுவிலும், தூய அடர்த்தியான திரவத்திலும் ஒற்றை நிற ஒளியை [Monochromatic Light] ஊடுறுவச் செய்து, ஒளிச் சிதறல் [Scattering of Light] நிகழ்வதை ஆராய்ந்தார். வாயுவில் ஒளியின் தனித்துவக் கோடுக்கு [Normal Line] இருபுறமும் இடம் தவறிய கோடுகளும் [Displaced Lines], திரவத்தில் தொடர்ந்த பட்டையும் [Continuous Band] தெரிந்தன. இவையே ராமன் ஒளிநிறப் பட்டைகள் [Raman Spectra] என அழைக்கப் படுபவை. அவ்விளைவுகள் மூலக்கூறுகளின் உள்ளே நிகழும் நகர்ச்சியால் உண்டாகுகின்றன. மூலக்கூறுகளுடன் மோதும் போது ஒளித் திரள்கள் [Photons] சக்தியை இழக்கலாம்! அல்லது சக்தியை சேர்க்கலாம்! ராமன் ஒளிச்சிதறல் [Raman Scattering] ஒளிநிறப் பட்டைகளைத் தனியே காட்டி, மூலக்கூறுகளின் வடிவத்தையும், அவற்றின் நகர்ச்சியையும் பற்றிய தகவலைத் துள்ளியமாகக் காட்டுகிறது.

ஒற்றைநிற ஒளி ஓர் பளிங்குக் கடத்தி ஊடே நுழையும் போது, ஓரளவு ஒளிச் சிதறுகிறது. சிதறிய ஒளிநிறப் பட்டையை [Spectrum] ஆராய்ந்தால், மூல ஒளியின் அலை நீளத்துடன், [Wavelength of the Original Light] அதற்குச் சம அளவில் மாறுபடும் வேறு நலிந்த கோடுகளும் காணப் பட்டன. அவை ராமன் கோடுகள் [Raman Lines] என்று அழைக்கப் படுகின்றன. ஊடுறுவும் ஒளித்திரள்கள் [Photons] கடத்தியின் கொந்தளிக்கும் மூலக்கூறுகளுடன் கூட்டியக்கம் [Interaction with Vibrating Molecules] கொள்வதின் விளைவால், ஒளித்திரள் சக்தியை இழந்தோ, அல்லது சக்தியைப் பெருக்கியோ அவ்வாறு மாறுபட்ட கோடுகள் தோன்றுகின்றன. ஆதலால் ராமன் விளைவு மூலக்கூறுகளின் சக்தி மட்டத்தின் நிலைகளை [Molecular Energy Levels] அறியப் பயன்படுகிறது.

ராமன் பலவித ஒளிச் சுரப்பிகளைப் [Light Sources] பயன்படுத்தி ஒளித் திரட்சியை [Intensity of Light] மிகைப் படுத்த முயன்று பலன் அடையாது, இறுதியில் பாதரஸப் பொறி மின்விளக்கு [Mercury Arc Lamp] ஒளியில் தேவையான ஒளி அடர்த்தி கிடைத்தது. அந்த ஒளித் திரட்சியை உபயோகித்துப் பலவித திரவங்கள் [Liquids], திடவங்கள் [Solids] ஆகியவற்றில் சிதறிய ஒளியின் ஒளிநிறப் பட்டைகளை [Spectra] ஆராய்ந்தார். அப்போது பாதரஸப் பொறி ஒளிநிறப் பட்டையில் இல்லாத வேறுவிதக் கோடுகள் பல, சிதறிய ஒளிநிறப் பட்டையில் தெரிந்தன! திரவ, திடவ மூலக்கூறுகள் சிதறிய அப்புதிய கோடுகளே ராமன் கோடுகள் [Raman Lines] என்று குறிப்பிடப் படுகின்றன.

நன்றி: திரு ஜெயபாரதன் http://jayabarathan.wordpress.com/2007/02/04/raman/

மேலும் படிக்க.
http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1930/raman-bio.html
en.wikipedia.org/wiki/C._V._Raman
சி. வி. இராமன் - தமிழ் விக்கிபீடியா ...
Nobel Prize Internet Archive
சி. வி. இராமன் பற்றி பிரிட்டானிக்காவில் உள்ள பதிவு
சி.வி.ராமன் பற்றி திண்ணையில் உள்ள பதிவு
சி. வி. ராமன் விவரணப்படம் குறித்த பதிவு

0 comments: