Tuesday, January 1, 2008

வரலாறு - மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார்

அந்த காலத்தில் சுதந்திரப் போராட்டத்துடன் சேர்த்து சமுதாய விடுதலைக்காகவும் போராட வேண்டியிருந்தது. அப்படி போராடியவர்களில் மிக முக்கியமானவர் ராமாமிர்தம் அம்மையார்.

நன்றி ♠ யெஸ்.பாலபாரதி ♠
எத்தனையோ மாமனிதர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஆனால், பல சாதனையாளர்கள் அப்படிப் பதிவு செய்யப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறார்கள். குடத்திலிட்ட விளக்காய் ஒளிவீசும் அவர்களின் பெருமைகள், உலகத்திற்கு அதிகம் தெரியாமல் போனது பெரும் சோகம்.

அவர்களில் ஒருவர்தான் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார்.

சில வருடங்களுக்கு முன் தமிழக முதல்வர் கலைஞர் ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம்’ என்கிற திட்டத்தை அறிவித்தது நினைவிருக்கலாம். அந்தச் செய்தியைப் படித்த பலருக்குக் கூட, அவர் யார் என்பது தெரியாமல்தான் இருந்தது. ‘மூவலூர் மூதாட்டி’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் அவர். அவர் புரிந்த இமாலயச் சாதனைகள் யாருக்கும் தெரியாது.. அதற்குக் காரணம் அவர் புகழ் விரும்பி எதையும் செய்ததில்லை. கொள்கைக்காக, தன்னுடைய லட்சியத்துக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகி அவர்.

‘தேவதாசி’ என்னும் மகா மோசமான முறை ஒன்று, தமிழகத்தில் சோழர் காலம் தொட்டு இருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில், கோயில்களுக்கு ‘நேர்ந்து விடப்பட்டு,’ அவர்களை ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாகவும், ஊராரை மகிழ்விக்கும் நடனப் பெண்மணிகளாகவும் ஆக்கியிருந்தது சமூகம். அவர்களின் தனிப்பட்ட ஆசைகளைப் பற்றியோ, நியாயமான உணர்வுகளைப் பற்றியோ எந்த அக்கறையும் இன்றி, ‘பொட்டு கட்டப்பட்டவர்களாகவும்’ ‘தேவரடியார்களாகவும்’ இழிவாகப் பேசப்படும் பிரிவினராகவும் அவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். ‘நித்ய சுமங்கலி’ என்று பெயர் கொடுத்து, அவர்களைப் ‘புனிதப்படுத்தி’ ஏமாற்றினார்கள் அந்தணர்கள். உடலை விற்கும் தொழிலை அவர்களின் மீது திணித்து விட்டு, அதற்குச் சடங்குகளின் பேரால் புனிதப் போர்வை போர்த்தி அநியாயம் செய்து வந்தார்கள், சனாதனம் பேசிய உயர்ஜாதியினர். இந்த அவலம் பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தது.

அப்படிப்பட்ட தேவதாசி இனத்திலேயே பிறந்து, அதனால் பாதிப்படைந்து, அந்தத் தளைகளை அறுத்து எறிந்ததும் அல்லாமல், அந்தக் கேடுகெட்டப் பழக்கத்தையே ஒழித்துக் கட்டும் வரை ஓயாமல் உழைத்தவர்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். அதற்காக அவர் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

சென்ற நூற்றாண்டில் 1883_ம் வருடம் பிறந்தவர் அவர். தேவதாசி சமூகத்தில் பிறந்தாலும், அவருடைய பெற்றோர்கள் அவரை அந்த இழிநிலைக்குத் தள்ளக் கூடாது என்றே வைராக்கியத்துடன் வளர்த்தார்கள். உறவினர்களும், வேறு சிலரும் ராமாமிர்தத்தின் தாய் தந்தையரிடம், ‘உங்கள் மகளுக்கு இசையும் நாட்டியமும் கற்றுக் கொடுங்கள், பிற்காலத்தில் அவள் அதை வைத்து நிறைய சம்பாதித்துக் கொடுப்பாள்’ என்று தொடர்ந்து வற்புறுத்திய போதும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் கோபமுற்ற சமூகம், ராமாமிர்தத்தின் தந்தையை ஒதுக்கி வைத்தது. பொருளாதாரரீதியில் அவரைத் தனிமைப்படுத்தியது. நாளடைவில் அவர்கள் அடுத்த வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல், வாழ்வின் ஓரத்துக்குத் தள்ளப்பட்டார்கள்.

ராமாமிர்தத்தின் தந்தையான கிருஷ்ணசாமி வாழ்க்கையில் வெறுப்புற்று, மனைவியையும், மகளையும் காப்பாற்ற முடியாத சோகத்தில், குடும்பத்தை விட்டு விலகி எங்கோ காணாமல் போனார். நிர்க்கதியாக நடுத்தெருவில் நின்ற தாய் சின்னம்மாள், பாவம் என்ன செய்வார்? உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோர் வீட்டுக்கும் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு நடையாய் நடந்தார். யாரும் உதவிக்கு வரவில்லை. ஆதரவற்ற நிலையில், தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி, ஒரு தாய் செய்யவே முடியாத, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கொடுமையை அவர் செய்ய நேர்ந்தது. ஒரு தேவதாசியிடம் 10 ரூபாய் பணத்துக்கும், பழைய புடவைக்கும் தன் ஆருயிர் மகளை விற்றார் அந்தத் தாயார். அப்போது சிறுமி ராமாமிர்தத்தின் வயது ஐந்து. அதன் பிறகு, அக்குழந்தையின் வாழ்க்கைப் பாதையே மாறிப் போனது.

ஆடுதல், பாடுதல் என்று பல கலைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. குழந்தையும் குமரியானாள். வயதுக்கு வந்த உடனேயே அவளுக்கு ஆபத்துக் காத்திருந்தது. அறுபது வயதுக் கிழவன் ஒருவன், தன்னிடம் பணம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக, அந்த இளம் பெண்ணை மணக்கப் பேராசை கொண்டான். அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால், அந்தக் கொடுமையைக் கண்டு பொங்கி எழுந்தார் ராமாமிர்தம். ‘கிழவனை மணக்க மாட்டேன்’ என்று அறிவித்தார். அத்தனை எதிர்ப்புகளையும் காலில் போட்டு மிதித்தார். அந்தக் காலத்தில் ஒரு பெண் இவ்வாறு துணிச்சலுடன் அறிவித்து, தனக்கு இசையும், நாட்டியமும் பயிற்றுவித்த இளைஞரையே மணப்பேன் என்று சூளுரைத்து, அதைச் செய்தும் காட்டியது என்பது மிகப் பெரிய காரியம். ராமாமிர்தம் சுயம்புப் பிள்ளையை மணமுடித்தது இப்படித்தான். இதற்குப் பிறகு ‘ஏதோ நம் வாழ்க்கை நல்லபடியாக முடிந்து விட்டது. இனி சொந்த நலனைப் பார்க்கலாம்’ என்று இல்லாமல், தேவதாசி முறையையே அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்று, அதற்காகப் போராடத் தொடங்கினார் ராமாமிர்தம். இதனால் பல இன்னல்களைச் சந்தித்த போதும், அவருடைய லட்சியத்துக்கு உறுதுணையாய் நின்றார், அவருடைய கணவர் சுயம்புப் பிள்ளை.

1917_ம் வருடம் முதல் மயிலாடுதுறை பகுதியில் தனது போராட்டத்தைத் துவங்கினார் ராமாமிர்தம். ஊர் நடுவே நின்று எரிமலையாக வெடித்துப் பிரசாரம் செய்து, ஒரு புயல் சின்னத்தைப் போல் சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார் அவர். தேவதாசிப் பெண்களிடம் சென்று ‘இந்த இழிவான வாழ்க்கையில் இருந்து விடுபடுங்கள்’ என்று எடுத்துரைத்தார். அவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘நாகபாசத்தார் சங்கம்’ என்கிற அமைப்பை ஆரம்பித்தார். (பிற்பாடு அது இசை வேளாளர் சங்கமாக மாறியது) அவர்களைக் கொண்டு இரண்டு பெரிய மாநாடுகளையும் கூட்டினார். இதனால் அவர் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம். பெரும் அரசியல் தலைவர்கள், ஜமீன்தார்கள், மைனர்கள், காவல் துறையினர், அந்தணர்கள், ரவுடிகள் என்று பல தரப்பினரும் ராமாமிர்தத்தின் போராட்டத்தை நசுக்கவே முயன்றார்கள்.. அவ்வளவு ஏன், தங்கள் விடுதலைக்காகத்தானே போராடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத தேவதாசி இனத்தவரே கூட, அவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அரசியல் பின்னணி இல்லாமல் சமூக மாற்றங்களைக் கொண்டு வருவது கடினம் என்பதைப் புரிந்து கொண்ட ராமாமிர்தம், பிறகு காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், தி.ரு.வி.க, வரதராஜுலு போன்றவர்கள் தேவதாசி முறை ஒழிப்புக்காகக் குரல் கொடுத்து வந்தனர். அவர்களால் ஈர்க்கப்பட்டதும் காங்கிரஸில் ராமாமிர்தம் இணைந்ததற்கு ஒரு காரணம். ராமாமிர்தத்தின் போராட்டங்களைப் பற்றி அறிந்த காந்தியடிகள் கூட அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். தேவதாசி முறை எவ்வளவு இழிவானது என்கிற விழிப்புணர்ச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்தியதில் பெரும் வெற்றி கண்டார்.

மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் காங்கிரஸில் அதிகப்படியாக இருந்தமையால், அவர்களால் பெரியார் போன்றோரின் புரட்சிகரமான கருத்துக்களை ஏற்க முடியவில்லை. குறிப்பாக, இட ஒதுக்கீடு பிரச்னையில் பெரியாரின் தீர்மானங்கள் அவர்களுக்கு வேப்பங்காயாகக் கசந்தன. அவர்களுடன் போராடிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்ட பெரியார், சிங்காரவேலர் போன்றவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்கள். அவர்களுடன் தானும் வெளியேறினார் ராமாமிர்தம். அதற்குப் பிறகு, பெரியார் தமிழகத்தில் ஏற்படுத்திய சூறாவளி மாறுதல்களில் ராமாமிர்தம் அவருக்குத் தோள் கொடுத்து நின்றார். ‘குடியரசு’ பத்திரிகையில் ராமாமிர்தத்தின் அனல் பறக்கும் கட்டுரைகள் தொடர்ந்து வெளி வந்தன. சுயமரியாதை இயக்க கொள்கைத் திட்டம் உருவானதில் ராமாமிர்தம் அம்மையாருக்குப் பெரும் பங்கு உண்டு.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காக சட்ட மன்றத்தில் அரும்பாடு பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும் நல்ல நட்பும் தொடர்பும் இருந்து வந்தது. சட்டமன்றத்தில் பணியாற்றுவது குறித்துப் பல ஆலோசனைகளையும், திட்டங்களையும் டாக்டர் முத்துலட்சுமிக்கு வழங்கினார் ராமாமிர்தம். தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட தீர்மானத்தை காங்கிரஸில் இருந்த சனாதனவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். அதில் முக்கியமானவர் ‘தீரர்’ சத்தியமூர்த்தி. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அந்தச் சட்டத்தைக் கொண்டு வர தீர்மானம் இயற்றியபோது, ஏதோ தீப்பட்டது போல் எதிர்த்த சத்தியமூர்த்தி, ‘தேவதாசி முறை தொடர்ந்து நடக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரம் சீரழிந்து விடும்’ என்று ஆவேசப்பட்டார். ‘இவ்வாறு அவர்கள் தொடர்ந்து பேசினால், இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க, இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்’ என்று பேசுமாறு டாக்டர் முத்து லட்சுமியிடம் சொன்னார் ராமாமிர்தம் அம்மையார். அவ்வாறே முத்துலட்சுமியும் சட்டமன்றத்தில் எரிமலையாகப் பேச, அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட சனாதனவாதிகள். பல போராட்டங்களுக்குப் பிறகு, 1929_ம் வருடம், உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானமாய் விளங்கிய தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

‘தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்கிற தான் எழுதிய நாவலை 1936_ம் வருடம் வெளியிட்டார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். அது தேவதாசிகளின் பரிதாப வாழ்வையும் , சொந்த அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டது. விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட இந்த நாவலை ஒரு வரலாற்று ஆவணம் என்றே சொல்லலாம். அரசியலிலும், கலைவாழ்விலும் ராமாமிர்தத்தின் பணிகள் இறுதி வரை தொடர்ந்தன. தேவதாசி முறை ஒழிக்கப்பட்டாலும் ரகசியமாகப் பல இடங்களில் அந்த முறை தொடர்ந்து நடந்து வந்தது. அங்கெல்லாம் நேரடியாகச் சென்று, விசாரணை நடத்திப் பல பெண்களை விடுவித்தார் அவர். அண்ணா, சிவாஜி கணேசன், டி.வி.நாராயணசாமி போன்றோர் நடித்த நாடகங்களில் தாயார் பாத்திரத்தில் தொடர்ந்து நடித்தார்.

“தனக்குப் பிறகு இயக்கத்தைக் கட்டிக் காத்து நடத்த மணியம்மையை விட்டால் வேறு யாருமில்லை’’ என்று பெரியார் அறிவித்தபோது ‘‘ஏன், எனக்குக் கூடவா அந்தத் தகுதி இல்லை?’’ என்று அவரிடமே நேரடியாகக் கேட்டார் ராமாமிர்தம். அப்போது திராவிடர் கழகத்திலிருந்து விலகி அண்ணா, தி.மு.க.வைத் தொடங்கியபோது, தன்னுடைய 70_வது வயதில் அவருடன் வெளியே வந்தார் ராமாமிர்தம் அம்மையார். பல்வேறு இயக்கங்களில் தீவிரப் பணியாற்றினாலும் தனக்கான முழு அங்கீகாரம் எங்குமே கிடைக்கவில்லை என்கிற மனப் புழுக்கம் அவருக்கு இருந்ததென்னவோ உண்மை. கண் பார்வை மங்கி விட்ட நிலையில், மாயவரத்தில் தன் மகனுடன் சிறுவர்களுக்குப் பாடம் நடத்தியபடி தன் கடைசி காலத்தைக் கழித்தார் அவர். 1962_ம் வருடம் சமூக விடுதலைக்காக உறக்கமின்றிப் போராடிய அந்த மூதாட்டி, எண்பதாவது வயதில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார். கடைசி வரை எந்தப் பதவியையும் அவர் வகிக்கவில்லை.

அவருக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் இரண்டுதான். ஒன்று, 1956_ல் அண்ணா வழங்கிய விருது. இரண்டு, 1989_ம் வருடம் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது மூவாலூர் ராமாமிர்தத்தின் பெயரில் அறிவிக்கப்பட்ட ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம். மற்றபடி, அந்த மாபெரும் மூதாட்டியைப் பற்றி யாருக்கும் நினைக்க நேரமில்லை. ☞

--------------------

தேவதாசி முறை ஒழிப்புக்காக வெறும் மேடைப்பேச்சுப் பிரசாரம் மட்டுமின்றி, கலை வெளிப்பாடாக பல நாடகங்களையும் ஊர் ஊராகச் சென்று போட்டு வந்தார் ராமாமிர்தம். அதைப் பொறுக்க முடியாத பழைமைவாதிகள், அவர் நாடகம் போட்டுக் கொண்டிருந்தபோது வன்முறைக் கும்பலாக மேடையேறிச் சென்று, அவர் கூந்தலைப் பிடித்து இழுத்து வெட்டி எறிந்தனர். மற்றொரு முறை பாலில் விஜம் கொடுத்துக் கொல்லவும் முயன்றனர். அதனால் எல்லாம் அவர் கலங்கிடவில்லை. தன் பணியின் தீவிரம் கொஞ்சமும் குறையாமல் போராடிக் கொண்டேயிருந்தார். காங்கிரஸின் கொள்கைகளையும் இடையிடையே பரப்பி வந்தார். குறிப்பாக, கதராடை பிரசாரத்தில் அவருடைய பணி சிறப்பானது. சுதந்திரப் போராட்டங்களில் பல நூதனமான வழிகளில் தன் போராட்டத்தை நடத்தினார். பேச்சாளர்கள் வாயைத் திறந்து பேசக்கூடாது என்று வெள்ளையர்கள் அறிவித்த போது, ராமாமிர்தம் தான் பேச நினைத்தவற்றை ஒரு கரும்பலகையில் எழுதி வைத்தது ஒரு உதாரணம். அரசியல்வாதிகளில் மேடைப் பேச்சில் கொடி கட்டிப் பறந்த முதல் பெண்மணி என்று இவரைத் தாராளமாகச் சொல்லலாம். எதிராகவும் தீரத்துடன் போராடினார், ராமாமிர்தம் அம்மையார்.



தாசித் தொழில்தான் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்ட ராமாமிர்தம், அதை மறுத்து ஒரு இசைக் கலைஞரைத் திருமணம் செய்து வாழ நினைப்பதா என்று கொதித்தவர்கள், ராமாமிர்தம் _ சுயம்புப் பிள்ளையின் திருமண வாழ்க்கையைக் குலைக்கச் சதி செய்தனர். ஒரு இளம் பெண்ணை ராமாமிர்தம் கொலை செய்துவிட்டதாகச் சொல்லி ராமாமிர்தத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. ராமாமிர்தம் கலங்கிடவில்லை. கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட அதே பெண்ணை, உயிருடன் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். யார் யாரெல்லாம் அந்தப் பெண்ணை மறைத்து வைத்துக் கொடுமைப் படுத்தினர் என்பதை அம்பலப்படுத்தி, அவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.
---------
நன்றி:- குமுதம் டாட் காம்

2 comments:

said...

good post

said...

பலர் அதிகம் அறிந்திராத சரித்திர நாயக நாயகிகளை அறிமுகம் படுத்தும் நல்ல முயற்ச்சிக்கு பாராட்டுகள்.