Tuesday, December 18, 2007

குடியும் குழந்தையும் - பத்மா அர்விந்த்

30/06: குடியும் குழந்தையும்
மனதில் ஒரு அமைதியின்மை இருக்கும் போது மனிதன் ஒரு செயற்கையான உலகில் இருக்க விரும்புகிறான். இதனாலேயே அதிக செயற்கை தனங்கள் நிறைந்த திரைப்படங்கள்,போதை மருந்துகள் போன்றவை ஒருவித கற்பனை உலகில் தப்பிக்க பெருமளவில் உதவுகின்றன.

பெரும்பாலானோர் இவற்றை ஒரு பொழுது போக்காக செய்வதும் உண்டு. அப்படியாக மது அருந்தும் பழக்கமும் தொடங்கி இருக்க வேண்டும்.

பொழுது போக்கிற்காக, ஒரு சமுதாய அங்கீகரிப்பிக்காக என்று தொடங்கி பலர் அதன் கட்டுடைப்பில் செல்வதும் சர்வ சாதாரணமாகிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஹோலியின் போது பாங்க் என்ற ஒருவித திரவம் தயாரித்து அதை அருந்தி போதையேறி ஆடுவதும் கேளிக்கைகளில் பங்கு கொள்வதும் உண்டு. இதில் ஒப்பியம் சிறிதளவு கலந்திருப்பதாக சொல்ல கேட்டிருக்கிறேன்.

பல ஹிந்தி திரைப்படங்களில்(டானில் வரும் பான் பனாரஸ் வாலா, சில்சிலா வில் வரும் ஹோலி, ஷோலேயில் வரும் ஹோலி )போன்றவற்றில் இதை காட்டியிருப்பார்கள்.

அமெரிக்காவிலும் ஒருகாலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. அப்போது பல கடத்தல்களும் அது தொடர்ந்த வன்முறைகளும் இருந்தது. பிறகு தடை நீங்கிய நாளில் அடிமாட்டு விலைக்கு புச் (Buch) ஒரு நிறுவனத்தை வாங்கி இன்று மிகப்பெரிய நிறுவனமாக வளத்துவிட்ட பட்வைஸர், மற்றும் வெளிநாட்டு மதுவகைகள் பல வரத்தொடங்கின. இவற்றில் கார்ப்போஹய்ட்ரேட் குறைவாய், கலோரி குறைவாய் என பல வகைகளில் கிடைக்க ஆரம்பித்தும், மதுவிலக்கு வந்தால் வேறு தொழில் வேண்டும் என்ற பாதுகாப்பாய் அன் ஹைஸ்ர்புச் போன்ற நிறுவனங்கள் உருளைக்கிழங்கு வறுவல், பழ ஜூஸ், சோடாக்கள் அடைக்கபடும் தகர அலுமினிய டப்பாக்கள் , குழந்தைகளை கவரும் கடல் உலகம் (sea worlds) போன்று பலவற்றிலும் முதலீடு செய்து நடத்துகிறார்கள். அனஹ்ய்ஸர் புச் நிறுவனத்தை பற்றி தனி பதிவே எழுதலாம்.

மது உடலில் ஆல்கஹால் டீஹைட்ராஜினேஸ் என்ற புரதத்தால் செரிக்க படுகிறது. துத்தநாகம் முக்கியமாக கொண்ட இந்த புரதம் 6 வகைகளில் உண்டு. இவற்றில் பெண்களுக்கும், இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் உள்ளவர்களுக்கும் செரிக்கும் சக்தி குறைவு என்பதால் குறைந்த அளவு மதுவே போதையை தரவல்லது. பியர் அருந்தும் வயதான 21 வந்தவுடனே, ஆண்கள் அதை ஒரு மதுக்கடையில் கொண்டாடுவதும் கோடையில் பல விபத்துக்கள் வருவதும் சகஜமாகி இருக்கிறது.

அரசின் சட்டப்படி 0.1% மது இரத்ததில் இருப்பின் கைது செய்து, வாகனத்தை கைப்பபற்ற முடியும். வாகனம் செலுத்தும் உரிமை 6 மாதம் தடை செய்ய படும். இங்கே அமெரிக்காவில் அது சுதந்திரத்தை தடை செய்யபடுவது போல என்பதால் மிக அதிக தண்டனை ஆக கருதப்படுகிறது. மூன்று முறைக்கு பின் 1 மாதம் சிறையில் இருக்க வேண்டும். இதனால் காப்பீடு, தனி வரி என 20,000$ வரை அபராதம் செலுத்த நேரிடும்.

இரண்டு பியரோ ஒரு கோப்பை ஒயினோ குடிப்பது நல்லது என்று சொன்னாலும் நண்பர்களுடன் குடிக்கும் போது அளவு மீறுவது சகஜம். மதுவிற்கு அடிமை ஆதலும் மதுவை அபயோகிப்பதும் வேறு வேறு.

மதுவை அபயோகிப்பவர்களால் ஒரு மாதம் கூட மதுவை தொடாமல் இருக்க முடியும். ஆனால் குடிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாமல் குடிப்பதும், எவ்வளவு குடித்தாலும் மறுநாள் வழக்கம் போல பணிக்கு செல்லவும் இயலும். நாளாவட்டத்தில் இதில் ஒருவித tolerance நிலைக்கு வந்துவிடுவார்கள்.

மூன்றுமுறை காவலர்களால் குடியின் போதையில் வாகனம் ஓட்டியவர்கள் கட்டாயமாக ஆல்கஹால் அநாமதேய கூட்டங்களுக்கு சென்று ஒரு படிவத்தில் கையொப்பமும் வாங்க வேண்டும்.இவை மிக வெற்றிகரமாக செயல் படும் திட்டம்.

இவற்றில் முதல் கட்டம் குடிக்கு அடிமையானவர்கள் அதை ஒப்புக்கொள்வதிலும் ஒருவர் மற்றொருவருக்கு உதவியாக இருப்பதிலும் ஆரம்பிக்கிறது. பல போதை தரும் பழக்கங்களுக்கும் மறுப்பு (denial) ஒரு முக்கிய குறைபாடு.அல்கஹால் அநாமதேயம் இதை முதலில் களைகிறது. நான் ஆர்வத்தின் மேலிட்டும், இதில் உள்ள நிதி திட்டம் பற்றியும் அறிய ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்தேன்.

மது பழக்கத்திற்கு அடிமையானவர்களின் குழந்தைகளுக்கு தனியாக அறிவுறைகள் தரவும், மனைவியர் படும் துன்பத்தை கேட்டு அறிவுறை கூறவும், ஒருவருக்கொருவர் உதவியாக தங்கள் அனுபவங்களை சொல்வதுமாக கூட்டம் நடக்கிறது. பெண்களின் அனுபவங்களும் காவலரை அழைத்து அனுமதி மறுப்பு வாங்கியபோதும் கணவனால் படும் துன்பங்கள், குழந்தைகள் அடையும் மன உளைச்சல்கள் கேட்டால் மதுவின் பக்கம் செல்லகூட மனம் வராது.

இதைப்பற்றி இன்று எழுதக்காரணம் நேற்று நடந்த ஒரு சம்பவம். மனைவி பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தில் ஒரு மென்பொருள் வெளியிடும் தேவை இருந்ததால் வீட்டிற்கு தாமதமாக வர நேர்ந்திருக்கிறது. அவருடைய கணவன் பொதுவாகவே நல்ல ஒத்துழைப்பு தருவதோடு தன் குழந்தைகளின் பேரில் அதிக அன்பும் உடையவன்.

ஆனால் அன்று அலுவலில் நடந்த ஒரு குழப்பத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கிறான். இரண்டு பியரில் ஆரம்பித்து அது மெதுவாக 6 வரை போக, பசி என்று சொன்ன குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பீட்சா கடைக்கு செல்லும் வழியில் வாகனம் சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இரத்ததில் 0.15% மது இருந்ததும், குழந்தைகள் பலத்தகாயங்களுடன் மருத்துவமனியில் இருக்கிறார்கள். கணவன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார். உற்றார் உறவினர் அனைவரும் அந்த பெண்ணின் தவறு என்று குற்றம் சாட்ட, பணம் என்று அலைந்ததும் காரணம் என்று சாட, மன நிறைவுக்காகவும் பணிக்கு செல்லும் அவர்கள் இருவரும் இப்போது பலத்த மன உளைச்சலில்.

கணவன் மீதும் மனைவியின் மீதும் குழந்தைகளை கவனிக்க தவறிய குற்றம் வரும் (குடிகாரரின் மேற்பார்வையில் குழந்தைகளை தனியாக இருக்க விட்டது), குழந்தைகள் ஊனமானால் வாழ்நாள் பூராவும் அவர்களின் குர்ற மனப்பான்மை ஊராரின் ஏச்சும் பேச்சும் என்று இவை தேவைதானா? கணவன் மீடு குழந்தைகளை விபத்துக்குள்ளாக்கிய குற்றமும் சேரும். வாழ்க்கையில் முன்னேற என்று நாடு விட்டு நாடு வந்து இந்த தேவையில்லாத அவஸ்தைகள் தேவைதானா?

தயவு செய்து அதிகமாக குடித்தால் வாகனம் செலுத்தாதீர்கள்.

2 comments:

Anonymous said...

நன்றி பத்மா & குட்டீஸ்

said...

எல்லாம் தெரிந்திருந்தும் இப்படி பொறுப்பில்லாமலோ இல்லை அதீத தன்னம்பிக்கை காரணமாகவோ இருப்பவர்களை என்னவென்று சொல்ல. கார் ஓட்டும் முன் ஒரு விநாடி யோசித்திருந்திருந்தால்... ம்ம்ம்...

மற்றபடி நீங்கள் கொடுத்துள்ள விவரங்கள் நன்று.